|

இன்றைக்கு ஒரு சிறிய பட்ஜெட் படத்தை ஒருவர் தயாரித்தால், பட்ஜெட்டில் பாதியைத் தொழிலாளர்களுக்குத் தான் தரவேண்டியிருக்கிறது. அதாவது, ஐம்பது லட்சத்தில் எடுத்து முடிக்க வேண்டிய ஒரு படத்தை, தொழிலாளர் சம்மேளன விதிகளுக்கு உட்பட்டு எடுத்தால் ஒரு கோடி ரூபாயில் தான் முடிக்க முடியும். அத்தனை நெருக்கடிகளை, சட்ட விதிகளை சம்மேளனம் முன்வைக்கிறது. அதாவது, படத்துக்கு தேவைப்பட்டாலும், படாவிட்டாலும் ஃபெப்சியின் 24 துறைகளைச் சேர்ந்த அனைவரையும் வேலைக்கு வைக்க வேண்டும். குறைந்தது இத்தனை பேரை வேலைக்கு வைக்க வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது. இப்படி காசு கொடுத்து தயாரிப்பாளர்கள் அழைத்து வரும் தொழிலாளர்கள், படப்பிடிப்பில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது தான் நியாயமா? இதுதான் தொழில் தர்மமா? வேலைக்கே ஆள் தேவைப்படாத போது, வேலைக்கு ஆள் வைக்கக் கட்டாயப்படுத்தி, அவர்களுக்குச் சம்பளம் வாங்கித்தருவது வழிப்பறிக் கொள்ளையாகத் தெரியவில்லையா?
தெரிந்தே நசுக்கும் இதுமாதிரியான சட்டங்கள், தயாரிப்பாளர்களை மட்டுமல்ல, படைப்பாளியான இயக்குனர்களையும் விட்டுவிடுவதில்லை. அவர்களுடைய சிந்தனைக்கு இடையூறு செய்வதின் மூலம், படத்தின் தன்மையும் பாதிக்கப்படுகிறது. ‘என்னிடம் இருக்கும் ஒரு ஐம்பது லட்சத்தில் ஒரு திரைப்படம் எடுத்து விட முடியும்,' என்று எந்த இயக்குனரும் நினைக்க முடியாது. ஃபெப்ஸி தொழிலாளர்களை வைத்து பணிசெய்யாவிட்டால், அந்தப் படமே திரைக்கு வரமுடியாது.
இதுபோன்ற நெருக்கடிகளால், ஏகாதிபத்தியச் சிந்தனைகளால் தமிழ்த் திரையுலகமும், தமிழ் சினிமா ரசிகர்களும் இழந்து விட்ட சிறந்த படைப்புகள் ஏராளம்.. சிறந்த இயக்குனர்கள் ஏராளம்.
சினிமாவின் காட்சித்தன்மை இன்று மாறிவிட்டது. திரையரங்கிற்குச் சென்று மட்டுமே ஒரு திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற நிலைமை இன்று இல்லை. டிஜிட்டல் சினிமா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. ஒரு லட்ச ரூபாய்க்கும் குறைந்த செலவில் டிஜிட்டல் கேமராவை வாங்கிவிட்டால் யார் வேண்டுமானாலும், படத்தை எடுத்துவிட முடியும். தொழிலாளர் நலன் என்ற போர்வையில் நிலவும் ஏகாதிபத்தியச் சட்டங்கள் ஒழிந்து விட்டால், ஆண்டொன்றுக்கு ஆயிரம் படங்கள் வெளியாகும். அதில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவை வெற்றி பெறும். அப்படி ஒரு சூழல் உருவாகும் போது, இப்போது சம்மேளனத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து வேலைவாய்ப்பு கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது.
திறமை இருந்து, தொழில்நுட்பம் தெரிந்திருந்தால் சில லட்சங்களில் ஒரு திரைப்படத்தை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம். ஆனால், அதுவே, ஃபெப்ஸி சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு படமெடுக்க வேண்டுமென்றால் அது ஒரு கோடி ரூபாய்க்குச் சற்றும் குறையாது. இது போன்ற எதேச்சதிகார, எதார்த்த நிலைமைகளுக்கு முற்றிலும் மாறான, தமிழ்த்திரையில் பல நல்ல படைப்புகளும், இயக்குனர்களும் உருப்பெற்று விடாமல் தடுக்கும் அரண்களைத் தகர்க்க வேண்டிய நேரமிது!.
படைப்பாளிகளையும், படைப்புகளையும் சிறை வைக்காதீர்கள். சினிமாவை ஒரு குடத்தில் மூடி வைக்காதீர்கள். அதைத் எல்லோருக்கும் திறந்து விடுங்கள். அது கங்கையாகப் பெருகி ஓடும். தேசத்தின் தாகத்தைத் தீர்க்கும். உலகெங்கும் தமிழகத்தைத் திரும்பிப் பார்க்கும். தமிழ் சினிமா பீடுநடை போட்டு, இழந்த பெருமையை மீட்டெடுக்கும்.
இயக்குனர் சேரன்,
(எந்த நிலையிலும் ஒரு இயக்குனராக - என்றும் கனவுகளோடும் வாழும் தொழிலாளி)
 |