|
என் முதல் கதை "பிராந்தி" - வாலி |
|
புதன்கிழமை, 07 டிசம்பர் 2011 19:43 |
|

நேற்று மாலை சென்னை அண்ணாசாலை காமராஜர் அரங்கத்தில் சாரு நிவேதிதாவின் "எக்ஸைல்" புத்தக வெளியீட்டு விழாவில் கவிஞர் வாலி கலந்துகொண்டு பேசினார்.
"ஆனு மாதத்திற்கு முன்புவரை சாருநிவேதிதாவின் எழுத்துக்களை நான் படித்ததில்லை. அவரைப் படித்தவுடன் நான் எழுதிவந்த பத்திரிகை தொடரில் அவரைப்பற்றி எழுதினேன். அடுத்த நாளே அவர் நேரில் வந்து என்னைச் சந்தித்துப் பேசினார். அவர் தற்போது எழுதியிருக்கும் நாவலை ஏக் தம்மில் நூறு பக்கங்களைத் தாண்டிவிட்டேன். ராமாயணம் ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றப்பட்டது முதல் சித்தர்கள் வரை அவர் இந்த நாவலில் பேசியிருக்கிறார்.
அவர் காமத்தைப் பற்றி எழுதுகிறார். அதில் தவறில்லை. காதலும் காமமும் இல்லாத மனிதன் யாருமே இல்லை. காதல் என்பது வெறும் இனக்கவர்ச்சி. காமம் என்பது மூக்கு என்றால் காதல் அதில் குத்தியிருக்கும் மூக்குத்தி. நான் எனது நினைவுகளை பத்திரிகை தொடராக எழுதியபோதும் பலத்த எதிர்ப்பைச் சந்தித்தேன். ஆனால் உண்மைகள் எதையுமே மறைக்க வேண்டுமென்று அவசியமில்லை. யாரையும் அது காயப்படுத்தக்கூடாது. அவ்வளவுதான்.
கவிஞனான உனக்கு கதைகளைப் பற்றி என்ன தெரியும் என்று கேட்கலாம். நான் இலக்கியத்திற்குள் அடியெடுத்து வைத்ததே கதை எழுத்தாளராகத்தான். நான் எழுதிய முதல் கதை "பிராந்தி". கலைமகள் இதழில் பிரசுரம் ஆனது. பதினேழு வயதில் ஸ்ரீரங்கத்தில் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன். அதைப் படித்துவிட்டுப் பாராட்டிய கல்கி சிட்டியிடம் என்னை அறிமுகப்படுத்தினார்."
இவ்விழாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி, மதன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மதன் தனது உரையின் முடிவில் "சாரு நிவேதிதா இன்னும் பல உயரங்களை எட்ட வேண்டும். ஆர்மோனியம் வாசிக்கக் கூடாது" என்று பஞ்ச் வைத்து முடித்தார் - பலத்த கைதட்டல்களுக்கு இடையே...
 |