|
பால்கே விருது: அங்கீகரிப்பின் ஆரம்பம் |
|
|
|
|
திங்கட்கிழமை, 02 மே 2011 12:33 |
|
தமிழுக்கு இரண்டாவது முறையாக தாதாசாகேப் பால்கே விருது கிடைத்திருக்கிறது. முதல் தடவை சிவாஜிகணேசனின் நடிப்புக்காக வழங்கப்பட்டது. இரண்டாவது தடவையாக இப்போது கே.பாலச்சந்தரின் இயக்கத்திற்காக.
இந்திய தேசத்தில் திரைப்படத் துறைக்காக வழங்கப்படும் மிக உயரிய விருது என்பதால் தமிழர்கள் என்றவகையில் நமக்கு மகிழ்ச்சியே. அதேவேளையில் தமிழ் சினிமாவின் கலைரீதியான போதாமைகள் குறித்து அவ்வப்போது தொடர்ந்துவரும் விவாதங்களுக்கு இதையும் ஒரு நல்ல சந்தர்ப்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாழ்நாள் சாதனைக்கான விருது என்றவகையிலும் இதற்குமுன் விருதினைப் பெற்றவர்களோடு ஒப்பிடுகையிலும் கே.பி. இவ்விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர். அவருக்குக் கிடைத்திருக்கும் விருதும்கூட காலதாமதமான அங்கீகாரமே. ஆனால் கே.பி.யின் ஆரம்பகாலத்து சபாநாடக முயற்சிகளின் தாக்கம் கடைசிவரைக்கும் அவரைவிட்டு நீங்கவே இல்லை. திரைமொழியின் மேலதிகமான சாத்தியங்களை நோக்கி அவர் நகரவே இல்லை. இருப்பினும் புராண நாடகங்களின் திரைப்பதிப்பிலிருந்து மாறி கதாநாயகர்களின் விராதீரங்களைப் பற்றி படம் எடுக்க ஆரம்பித்த நாட்களில் மனித உறவுகளுக்கு இடையே எழும் சிக்கல்களை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக பதிய பாதையை உருவாக்கியவர் கே.பி.
இன்னும் கே.பி.க்கு அடுத்து திரைமொழியின் சாத்தியங்களை முன்னெடுத்தவர் என்றவகையில் பாலுமகேந்திராவும், கிராமத்து மண்ணின் வாழ்க்கையை அதன் மணம் மாறாமல் சினிமாவில் சித்தரித்த பாரதிராஜாவும் விருதுப்பட்டியலில் இடம்பெறுவதற்கான சகல தகுதிகளோடும் காத்திருக்கிறார்கள்.
இந்திய சினிமாவின் அங்கீகாரத்திற்காக தமிழ் சினிமாவின் சாதனையாளர்கள் அதிக காலம் காத்திருக்கும் நிலை ஏற்படாது என்றே நம்புவோம்.
 |