Gallery
Gallery

தேடல்

Webozeeya.com
முதல் பக்கம் ஆசிரியர் பக்கம் தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக் காலம்
தமிழ் சினிமாவின் மறுமலர்ச்சிக் காலம்
திங்கட்கிழமை, 29 நவம்பர் 2010 12:17

இலக்கியம், இசை, ஓவியம், கட்டிடக்கலை, ஆடை அணிகலன் வடிவமைப்பு என கலைகளின் சங்கமமாக சினிமா விளங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் உருவான அதிவேக அறிவியல் வளர்ச்சியின் அத்தனைப் பயன்பாடுகளையும் உள்வாங்கிக்கொண்டு மென்மேலும் அது வளர்ந்துகொண்டேயிருக்கிறது. ஆனால் மற்ற கலைத்துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை அது சரிவரப் பயன்படுத்திக்கொள்கிறதா?

சினிமா என்ற புத்தம் புதிய கலைவடிவம் உருவானபோதே அதில் பிரபல ஓவியர்களும் இசைமேதைகளும் பங்கெடுத்துக்கொண்டிருக்கிறார்கள். லூயி புனுவலும் சல்வடோர் டாலியும் சேர்ந்து படங்கள் எடுத்ததுபோல இங்கேயும் நடக்காமல் இல்லை. பாபநாசன் சிவன் போன்ற இசைமேதைகளும் கல்கி போன்ற எழுத்தாளர்களும் சினிமாவில் நேரடியாகவே பணிபுரிந்திருக்கிறார்கள். சாஸ்திரீய சங்கீத விற்பன்னர்கள் திரையிசைக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள். இடையில் ஒரு நீண்ட இடைவெளி.

அது வெறும் இடைவெளி மட்டும்தான். இப்போது மீண்டும் தமிழ்சினிமாவில் ஒரு புத்தெழுச்சி ஏற்பட்டிருக்கிறது. நவீன ஓவியரான ட்ராஸ்கி மருது "நந்தலாலா" படத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகித்திருக்கிறார். "மகிழ்ச்சி" படத்தில் அவரது ஓவியங்கள் மட்டுமே ஒரு முக்கியக் காட்சியாக அமைந்திருக்கிறது. "பேராண்மை" படத்தில் அவரே ஒரு முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

மற்றொரு நவீன ஓவியரான வீர.சந்தனம் பாலுமகேந்திராவின் "சந்தியாராகங்கள்" படத்தின் முதன்மைப் பாத்திரமாக நடித்து ஏற்கெனவே நன்கு அறியப்பட்டவர். அவரும் "அவள் பெயர் தமிழரசி", "மகிழ்ச்சி" படங்களின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

நாடக நடிகர்களும்கூட முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது சினிமாவில் பங்கெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் நாடகத் துறைத் தலைவரான பேராசிரியர் மு.இராமசாமி தொடர்ந்து நடித்துவருகிறார். "தியேட்டர்லாப்" என்ற நாடகக்குழுவை நடத்தும் ஜெயராவ், "அவள் பெயர் தமிழரசி" படத்தில் நடித்திருப்பதோடு "கருங்காலி" படத்திற்கு நடிப்புப் பயிற்சியும் அளித்திருக்கிறார். "விருமாண்டி" படத்தில் பேய்க்காமனாக அறிமுகமாகி தொடர்ந்து நடித்துவரும் சண்முகராஜா "கிருஷ்ணவேணி பஞ்சாலை" என்ற படத்திற்கு நடிப்புப்பயிற்சி அளித்துவருகிறார்.

இன்னொருபக்கம் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன் என்று இலக்கியவாதிகளும் தங்களது தயக்கங்களை உதறிவிட்டு சினிமாவுக்கு எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். மிஷ்கினின் அடுத்தப் படத்திற்கு பிரபஞ்சன் கதை, வசனம் எழுதுகிறார். நாஞ்சில்நாடன், மகுடேசுவரன் ஆகியோர் பாடல்கள் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படி நாடகம், ஓவியம், இலக்கியம் என்று சமகாலத்தில் தீவிரமாக இயங்கும் கலைஞர்களோடு கைகோர்த்து தமிழ்சினிமா தன்னை மெருகேற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது. இது தொடர வேண்டும். உலகளவில் தமிழ்சினிமாவை தரம் உயர்த்த வேண்டும். தமிழ் சினிமாவின் ஆக எளிய ஒரு சினிமா ரசிகனுக்கு இதைவிடவும் வேறென்ன மகிழ்ச்சி இருக்கமுடியும்?



Social Bookmarking websites
Reddit! Del.icio.us! Mixx! Free and Open Source Software News Google! Live! Facebook! StumbleUpon! Yahoo! Free Joomla PHP extensions, software, information and tutorials.

Add this to your website
Comments (0)Add Comment

Write comment

busy
 

Top Box Office